பேரணாம்பட்டு அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பாடை எடுத்து வந்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் கற்களும் வீசப்பட்டதால் போலீசார் தடியடி நடத்தினர். மேலும் தாசில்தார் வாகனமும் உடைக்கப்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது. பேரணாம்பட்டு அருகே அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலும் ஒரு டாஸ்மாக் கடை அதே பகுதியில் திறக்கப்பட்டது. இதனால் மதுபிரியர்கள் அழிஞ்சிகுப்பம் கிராமத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இதனால் இப்பகுதி பெண்களின் பாதுகாப்பு மற்றும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விகுறியாக இருந்து வந்தது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு அவ்வழியாக சென்ற பெண்களை டாஸ்மாக் கடைக்கு வந்த ‘குடி’மகன்கள் கேலியும், கிண்டலும் செய்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் 2 டாஸ்மாக் கடைகளையும் அகற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 300–க்கும் மேற்பட்டோர் நேற்று அழிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் சவ மேளத்துடன் வைக்கோலை பிணம் போல செய்து அதனை வண்டியில் வைத்து பாடை கட்டி எடுத்து வந்து டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு 50–க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர். மேலும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக 2 டாஸ்மாக் கடைகளும் திறக்கப்படவில்லை.இதுகுறித்து தகவல் அறிந்த பேரணாம்பட்டு தாசில்தார் பத்மநாபன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு மற்றும் பேரணாம்பட்டு, மேல்பட்டி போலீசார் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் நாங்கள் கடையை மூடக்கோரிக்கை விடுத்து பலமுறை மனு அளித்துள்ளோம். இந்த நிலையில் மேலும் ஒரு டாஸ்மாக் கடையை திறக்க உள்ளதாக தெரிகிறது. எனவே ஏற்கனவே உள்ள டாஸ்மாக் கடைகளில் உள்ள மதுபானங்களை அகற்ற வேண்டும் என கூறி ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் டாஸ்மாக் கடையின் சிமெண்டு கூரைகளையும், பெயர் பலகையையும் பிடுங்கி எறிந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போலீசார் கூட்டத்தை கலைக்க தடியடி நடத்த ஆரம்பித்தனர். எனவே ஆவேசம் அடைந்த பொதுமக்கள் போலீசார் மீது கற்களையும், பாட்டில்களையும் வீசி தாக்கினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் ஆவேசம் அடைந்த பொதுமக்கள் அங்கு டயர்களை கொளுத்தியும், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த தாசில்தாரின் ஜீப் கண்ணாடியையும் அடித்து நொறுக்கினர். இதனால் அந்த இடம் போர்களம் போல் காட்சி அளித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டம் வன்முறையில் முடிந்ததால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 7 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.