திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டத்தின் ஜவ்வாது மலை ஒன்றியத்தில் உள்ள புளியங்குப்பம் தொடக்கப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டாச்சியர் அதிரடி ஆய்வு மேற்கொண்டார். புளியங்குப்பம் மலை கிராமத்திற்கு ஜாதி சான்றிதழ் வழங்குவதற்கான உண்மை தன்மை கண்டறிய திருவண்ணாமலை மாவட்ட கோட்டாச்சியர் உமா மகேஸ்வரி நேற்று முன்தினம் சென்றிருந்தார். அங்கிருந்த மலை வாழ் மக்களிடம் விசாரணையை முடித்து கொண்டு அப்பகுதியில் உள்ள புளியங்குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதிரடி ஆய்வு நடத்தினார். பள்ளியில் படிக்கும் மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகளை பலவகையில் சோதித்தார். தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் எழுத்து திறன்களையும், அடிப்படை கணித அறிவு போன்றவற்றையும் கண்டறிந்தார். கோட்டாச்சியர் மாணவர்களிடையே தரையில் அமர்ந்து மாணவர்கள் அச்சமின்றி உரையாடும் வகையில் தாய் உள்ளத்தோடு கலந்துரையாடினார். இதனை கண்ட பொதுமக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி பொங்கியது. மேலும் பள்ளியின் கல்வி மேம்பாட்டுக்கு சேவை மனப்பான்மையுடன் ஆசிரியர்கள் செயல்படுமாறு கேட்டுக் கொண்டார். குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மாணவர்கள் இடை நிற்றல் தவிர்ப்பு, பெண் கல்வி முக்கியம், 1 முதல் 14 வயது குழந்தைக்களுக்கான கட்டாய இலவச கல்வி உள்ளிட்ட அரசின் கல்வி சார்ந்த நிலைப்பாடுகளை பெற்றோர்களிடம் எடுத்துரைத்தார். மலைவாழ் மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு பெற்றோர் , ஆசிரியர், மாணவர்கள் ஆகிய மூன்று தரப்பினரின் ஒத்துழைப்பு அவசியம் இருக்க வேண்டும் என்பதையும் கோட்டாச்சியர் உமா மகேஸ்வரி விரிவாக விளக்கினார். ஆசிரியர்களின் மற்றும் மாணவர்களின் வருகை பதிவேடுகள், கல்வி சார்ந்த திறன் பதிவேடுகள், சத்துணவு ,உள்ளிட்ட 14 வகையான அரசின் விலையில்லா திட்டங்களின் அமலாக்கம் பற்றியும், குடிநீர், கழிவறை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் மஞ்சுநாதன், பள்ளி தலைமைஆசிரியர் வெங்கடேசன்,வாழியூர் விஏஓ செந்தில்நாதன் ஆகியோர் இருந்தனர்.