கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் என மொத்தம் 15-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் பணியில் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் பர்கூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் கூட இல்லாமல் அனைத்து கதவுகளும் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போலீஸ் நிலையம் பூட்டப்பட்டதால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் எதற்காக போலீஸ் நிலையம் பூட்டப்பட்டது என தெரியாமல் புகார் கொடுக்க வந்தவர்கள் குழப்பத்துடன் இருந்தனர். காவலர் தேர்வு அதாவது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காவலர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதனால் தேர்வுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் இருந்த இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், பெண் போலீசார் அனைவரும் முன்கூட்டியே போலீஸ் நிலையத்தை பூட்டிவிட்டு சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தபோது அவர்கள் கூறியதாவது:- நாளை (அதாவது இன்று) காவலர் தேர்வு பணியிடங்களுக்கான தேர்வு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8 மையங்களில் நடக்கிறது. இந்த எழுத்து தேர்வுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உள்ள போலீசார் சென்றுள்ளனர். இதன் காரணமாக தான் போலீஸ் நிலையத்திற்கு பூட்டு போட்டுவிட்டு போலீசார் சென்றுள்ளனர், என தெரிவித்தனர். பரபரப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் நேற்று முன்தினம் முதல் பூட்டப்பட்டதால் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுக்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் போலீஸ் நிலையம் செயல்படாததால் மர்ம நபர்கள் தைரியமாக திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளதாகவும், எனவே, பர்கூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும் எனவும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸ் நிலையம் பூட்டப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.