வஉசி துறைமுக நிதியினை இணையம் துறைமுகத்திற்கு பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடியில் நடைபெற்ற ஐஎன்டியூசி 238வது மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தூத்துக்குடியில் ஐஎன்டியூசி 238வது மாநில செயற்குழு கூட்டம் மற்றும் 70வது ஆண்டு துவக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு மாநில தலைவர் கே.எஸ். கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். செயல்தலைவர் கதிர்வேல் வரவேற்புரை ஆற்றினார். பொருளாளர் தேவராஜன், பொதுச் செயலாளர்கள் ஜகன்னாதன், களஞ்சியம், மாவட்ட தலைவர் ராஜகோபால், மதுரா கோட்ஸ் சுடலை, கேடிஎம் ராஜா, உட்பட தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : ஐஎன்டியூசி தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்கத்தவறிய ஐஎன்டியூசி தலைவர் காளான் மீது விரைவாக எடுக்க வேண்டும். தமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் குறைகளை தீர்க்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து கழகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற 60ஆயிரம் தொழிலாளர்களுக்கு பணிக்கொடை மற்றும் பிஎப் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும. தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள விரிவாக்கத் திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடி துறைமுக நிதியினை இணையம் துறைமுகத்திற்கு பயன்படுத்தக் கூடாது. ஒப்பந்த தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உப்பள தொழிலாளர்களுக்கு தினக்கூலி மிகவும் குறைவாக உள்ளது, அவர்களுக்கு சம்பளம் போனஸை உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உட்பட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது