திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த காட்டுகாநல்லூர் ராமச்சந்திரபுரம் கிராமத்தில் ராணுவ வீரர் மனைவி நகைக்காக கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டார். நான்கு நாட்களில் கண்ணமங்கலம் போலீஸார் துப்பு துலக்கி கொலையாளிகள் இரு வாலிபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து தாலி சரடு, வெள்ளி கால் கொலுசு, ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். காட்டுக்காநல்லூர் அடுத்த ராமச்சந்திரபுரத்தில் வசிக்கும் சங்கர் (48 ) . ராணுவ வீரரான சங்கர் அஸ்ஸாம் மாநிலத்தில் பணிபுரிந்து வருகிறார். சங்கர் மனைவி காந்தரூபி (38), மகன் சக்திவேல் (17 ) பிளஸ் 2 படித்து வருகிறார். ராமச்சந்திரபுரம் வீட்டில் தனியாக இருவரும் வசித்து வந்தனர். சக்திவேல் டியூஷன் படித்து விட்டு இரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம். காந்தரூபி வட்டிக்கு பலரிடம் பணம் கொடுத்து வாங்கி வந்துள்ளார். தனியாக உள்ள மாடி வீட்டில் ஆடம்பரமாக வசித்துவந்த காந்தரூபி கழுத்தில் தங்க நகைகளுடன் ஸ்கூட்டியில் கண்ணமங்கலம், அரசம்பட்டு உட்பட பல பகுதிகளுக்கு சென்று வருவது வழக்கம் இதனை நோட்டமிட்ட மர்ம திருட்டு வாலிபர்கள் காந்தரூபியை சில நாள் பின் தொடர்ந்து உள்ளனர். பின்னர் ராமச்சந்திரபுரத்தில் தனியாக உள்ள வீட்டையும் நோட்டமிட்டனர். மே 11 வியாழன் இரவு கீழ் அரசம்பட்டு சந்தையில் இருந்து வீடு நோக்கி திரும்பிய காந்தரூபியை நச்சிமேடு அருகே மர்ம வாலிபர்கள் இருவர் முகமூடியுடன் வழிமறித்து நின்றனர். பணம் கேட்டு காந்தரூபியை மிரட்டினர். மிரட்டலுக்கு பயப்படாமல் காந்தரூபி சர்ரென்று ஸ்கூட்டில் வீடு நோக்கி விரைந்து சென்றார். முகமூடி வாலிபர்கள் காந்தரூபியை பின் தொடர்ந்து வீட்டினுள் சென்றனர். சமையலறையில் இருந்த மிளகாய் தூளை எடுத்து முகமூடி ஆசாமிகள் காந்தரூபியின் முகத்தில் தெளித்தனர். கண் எரிச்சலில் தவித்த காந்தரூபியின் கழுத்தில் சைக்கிள் பம்ப் டியூப் மூலம் கழுத்தை இறுக்கி கொன்றனர். அடையாளம் தெரியாமல் இருக்க, துப்பு துலங்காமல் இருக்க மிளகாய்தூளை உடலை சுற்றி தூவினர். காந்தரூபியின் ஜாக்கெட், நைட்டியை கிழித்து கற்பழித்து கொன்றதாக போலீஸை நம்ப வைக்க நாடகம் ஆடினர். இந்நிலையில் டியூஷன் முடித்து வீட்டுக்கு வந்த சக்திவேல் வீடு உள் பக்கமாக தாழ் போட்டிருந்ததால் வெளியே இருந்த கட்டிலில் தூங்கி விட்டார். கொலையை முடித்த திருடர்கள் காந்தரூபின் நகைகள் மற்றும் ரொக்கத்துடன் தப்பியோடினர்.இரவு 10 மணிக்கு கண் விழித்த சக்திவேல் திறந்திருந்த வீட்டிற்குள் நுழைந்து சமையலறைக்கு சாப்பிட சென்றான். அங்கே தனது தாய் காந்தரூபி அலங்கோலமான நிலையில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கண்ணமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை மாவட்ட எஸ் பி பொன்னி, ஆரணி டிஎஸ்பி ஜெரினா பேகம், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், திருவண்ணாமலை மாவட்ட கைரேகை நிபுணர் டிஎஸ்பி சுந்தர்ராஜன், கண்ணமங்கலம் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜா, மனோகரன், ரங்கநாதன், வேலு, ராஜேந்திரன், போலீஸ் மோப்ப நாய் பெஸ்ஸி, பயிற்சியாளர்கள் மற்றும் போலீஸார் விரைந்து வந்தனர். கைரேகைகள் பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டு விசாரித்து வந்தனர் இந்நிலையில் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீஸார் காட்டுகாநல்லூர் மந்தைவெளி பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போது பைக்கில் வந்த இரு வாலிபர்களை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூற போலீஸார் இரு வாலிபர்களையும் கண்ணமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சிங்கிரிகோயில் லட்சுமிபுரத்தை சேர்ந்த பழனி (26 ) ,பிரசாந்த் (26) என தெரியவந்தது இவர்கள் தான் காந்தரூபியை நகைக்காக கொலை செய்தோம் என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் வழக்குப்பதிந்து பழனி ,பிரசாந்த் இருவரையும் ஆரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேலூர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்தார். அவர்களிடமிருந்து தாலி சரடு உட்பட 13 சவரன் தங்க நகை, வெள்ளி கால் கொலுசு, ரொக்கம் 2 ஆயிரத்து 400, அவர்கள் ஓட்டி வந்த பைக்கையும் கண்ணமங்கலம் போலீஸார் பறிமுதல் செய்தனர்.