ஆம்பூர் அருகே மாதனூரை அடுத்த பள்ளிகுப்பம் பகுதியில் கல்குவாரி இயங்கி வந்தது. பின்னர் கைவிடப்பட்ட இந்த கல்குவாரி அருகில் நீர் தேங்கி குட்டை உருவாகி உள்ளது. இந்த தேங்கிய குட்டை நீரில் மாதனூர், பள்ளிகுப்பம், அகரம்சேரி, பாலாண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று குளித்து வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவில் மாணவர்களும் அங்கு சென்று குளித்து வருகின்றனர். இந்த நிலையில் மாதனூர் பொன்நகர் பகுதியை சேர்ந்த பாபுசவுந்தர் என்பவரின் மகன் மோசஸ் (வயது 17). இவர் பள்ளிகொண்டாவில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்–1 முடித்து, பிளஸ்–2 செல்ல உள்ளார். சுபா நகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கிடியோன் (15). இவர் மாதனூரில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்து இருந்தார். கோடை விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க மோசஸ், கிடியோன் உள்ளிட்ட 10 மாணவர்கள் கல்குவாரி குட்டைக்கு குளிக்க சென்றனர். மோசஸ், கிடியோனுக்கு நீச்சல் தெரியாது என கூறப்படுகிறது. மதியம் குட்டையில் குளித்து கொண்டிருந்தபோது கிடியோன் குட்டையின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளார். நீச்சல் தெரியாததால் கிடியோன் நீரில் மூழ்க ஆரம்பித்தார். அவரை காப்பாற்ற மோசஸ் சென்று கை கொடுத்துள்ளார். அப்போது மோசஸ், கிடியோன் ஆகிய 2 பேரும் நீரில் மூழ்கினர். இதை பார்த்த சக மாணவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியாததால் ஊருக்குள் விரைந்து சென்று பொதுமக்களை திரட்டி வந்து தேடினர். ஆனால் நீரில் மூழ்கிய 2 பேரும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. உடனடியாக ஆம்பூர் மற்றும் ஒடுகத்தூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீரில் மூழ்கிய மாணவர்களின் உடலை தேடினர். சுமார் 3 மணி நேரம் போராடியும் 2 பேரும் கிடைக்கவில்லை. உடனடியாக வேலூரில் இருந்து சிறப்பு மீட்புப்படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த படகு மூலம் சுமார் ஒரு மணி நேரம் போராடி 2 பேரையும் பிணமாக மீட்டனர்.இதுகுறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கசசென்ற பள்ளி மாணவர்கள் 2 பேர் கல்குவாரி குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.