குடியாத்தம்


SUBMITTED BY: vinothushaptc

DATE: June 28, 2017, 7:37 a.m.

FORMAT: Text only

SIZE: 3.5 kB

HITS: 307

  1. வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் கவுண்டன்ய மகாநதியின் வடக்குகரையில் அமைந்துள்ளது. மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி 1–ந் தேதி அம்மன் சிரசு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டு கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30–ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 11–ந் தேதி இரவு கெங்கையம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், நேற்று முன்தினம் கெங்கையம்மன் தேர் திருவிழாவும் நடைபெற்றனவிழாவின் உச்ச நிகழ்ச்சியான கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இதனையொட்டி காலை 5 மணிக்கு குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் புறப்பட்டது. பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலிஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை காலை 9–30 மணி அளவில் அடைந்தது.
  2. பின்னர் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டு இருந்த உடலில் (சண்டாளச்சி) அம்மன் சிரசு பொருத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண்திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் அம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றி வைத்தும், தேங்காய்களை உடைத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் திரண்டிருந்தனர். மேலும் ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
  3. சிரசு திருவிழாவையொட்டி நகரம் முழுவதும் பொதுமக்களும், சமூகநல ஆர்வலர்களும், பக்தர்களும், கல்வி நிறுவனங்களின் சார்பிலும் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர், மோர், கூழ், பானகம், குளிர்பானங்கள் மற்றும் அன்னதானம் வழங்கினர். மேலும் குடியாத்தம் நகராட்சி சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், சுகாதாரம், முதலுதவி மருத்துவ வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
  4. கோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர். இரவு 8 மணி அளவில் அம்மன் சிரசு சண்டாளச்சி உடலில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு கவுண்டன்ய மகாநதி, ராஜேந்திரசிங் தெரு வழியாக சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நாளை (புதன்கிழமை) பூப்பல்லக்கு நடக்கிறது. விழாவில் உதவி கலெக்டர் அஜய்சீனிவாசன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் கஜேந்திரன், தாசில்தார் நாகம்மாள், எம்.எல்.ஏ.க்கள் ஜெயந்திபத்மநாபன், ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அசோக்குமார், கே.எம்.ஜி. கல்லூரி செயலாளர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், கம்பன் கழக தலைவர் பழனி, அரசு வக்கீல் கே.எம்.பூபதி உள்பட அரசு அதிகாரிகள், வியாபாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள் உள்பட லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவை முன்னிட்டு நேற்று வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் காரணமாக தற்போது பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. இதன்காரணமாக குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்து செல்லும் வெளியூர் பக்தர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர்.

comments powered by Disqus